பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Tuesday, September 21, 2010

தத்துப்பித்து தத்துவம்

என் கனவுகள் எல்லாம்

 கலைந்து போயின!

உணர்வுகள் கூட

உலர்ந்து போயின!

தொட்டால் சுருங்கும் செடியினைப் போல

பட்டு சுருங்கியது எனது உள்ளம்!


விதியா வினையா

இயற்கை விளையாட்டா

எதுவென்றே புரியாமல்

ஏறி இறங்கியது வாழ்க்கை!

அதெல்லாம் சரி!

பள்ளி முடித்த குழந்தை

படிக்கட்டு ஏறுகையில்

இந்தத் தத்துவமெல்லாம்

அவள் தத்துப்பித்துமுன்

தானே வெளியேற

குழந்தையோடு குழந்தையாய் நான்!

Friday, August 6, 2010

சுட்டும் விழிச்சுடர் கட்டும் கருவிழி

சுட்டும் விழிச்சுடர்! கட்டும் கருவிழிகள்!
பொட்டும் பூவும் பரிமளிக்க
பட்டும் மேனியாய் அவள் தரிக்க- மின்
வெட்டும் நின்றது போல் அவள் சிரிக்கஇது
கொட்டும் அருவியோ சிட்டுக் குருவியோ என திகைக்க
தட்டும் உணவும்போல் இணைய மனக்கதவை
தட்டும் அவள் கைகள் கனவில்! காதல்
மெட்டும் கூட காதில் கேட்கிறது! இன்பம்
கிட்டும் கிட்டுமென்ற அசரீரி கேட்கிறது!
தொட்டும் தொடாமலும் என்னருகில் அவள்
மட்டும் இருந்திருந்தால் கனவுகள் நினைவேதான்! ஆனால்
சிட்டும் அவளோடு அஞ்ச வைக்கும் அண்ணன்
வெட்டும் வீச்சரிவாள் இல்லாமலே பயமுறுத்த
பட்டும் படாததுபோல் பாசாங்கு நான் செய்தேன்

Wednesday, August 4, 2010

தந்தை பாசம்தண்டச்சோறு
ஊர்சுத்தி என்று
சதா சர்வகாலமும்
திட்டினாலும்
நான் எடுப்பேன்
எனத் தெரிந்தே
ஓரம் கிழிந்த அவர்
சட்டையின் பையில்
என் அப்பா வைக்கும்
அந்த நூறு ரூபாய்த்
தாளின் 
வியர்வைக் கரையில்
தெறிக்கிறது
எனக்கும்
என்
தந்தைக்குமான பாசம்!

கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க :

Wednesday, July 28, 2010

ஒரு பூங்காவின் வரவு செலவுஒரு பட்டாம்பூச்சிதான்
அன்று
அந்தப் பூங்காவின்
முதல் வரவு!
மெல்ல மெல்ல 
 சிறகடித்து
தன் பட்டு இறக்கை
குவித்து விரித்து
முதல் பூவான
 ஊதாப் பூ மேல்
உட்கார்ந்தது!
அதன் நீலப் பொட்டு
சிறகிற்கும்
ஊதாப் பூவின்
நிறத்திற்கும்
ஒத்துப் போயிருக்கலாம்!


ஊதாப் பூவை
முகர்ந்தபடியே
சுற்றிலும் பார்த்தது
பட்டாம்பூச்சி!
தூரத்தில் இருந்து
பட்டாம்பூச்சியைப்
பார்த்தது
வெளிர் நிற ரோஜா!
வண்ண வண்ணமான
மலர்களுக்கிடையே
வண்ணமேயில்லாத
அந்த ரோஜாவை
ஆச்சர்யமாய் பார்த்தது
பட்டாம்பூச்சி!

மலர் விட்டு
மலர் தாவுதல்
குற்றமென்ற சட்டம்
அந்தப் பூங்காவில்
அமலில் இல்லை!
ஊதாப் பூ விட்டு
வெள்ளை ரோஜாவுக்கு
உடனே கூட
தாவியிருக்கலாம்........
ஆனாலும் அது
ஊதாப் பூவிலேயே
உட்கார்ந்திருந்தது!

அவ்வப்போது
வெள்ளை ரோஜாவும்
நிலச்சிறகு பட்டாம்பூச்சியும்
பார்வைப் பரிமாற்றம்
பலநூறு செய்தன!


ஒரு ரீங்காரம் ஒன்று
காற்றைக் கிழிக்க
கரிய வண்டொன்று
மௌனம் கலைத்தது!

கடைசியாய்...
பட்டாம் பூச்சி
அந்தப் பக்கம்
பார்க்கையில் - அது
வெள்ளை ரோஜா பக்கம்
போனதாய்த்தான்
அதற்கு ஞாபகம்!

அன்று
தோட்டத்தை விட்டு
 கடைசியாய்
காற்றில் போனது
நான்கைந்து
ரோஜா இதழ் சருகுகளும்
ஒரு நீலச் சிறகும் தான்!


கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க : 

Monday, July 26, 2010

ஆயிரம் முகங்கள்!காதலில் சொன்னால் வர்ணனை!

கவிதையில் சொன்னால் உவமை!

கதையில் சொன்னால் கற்பனை!

விளம்பரம் சொன்னால் விற்பனை!

கோர்ட்டில் சொன்னால் சாட்சி!

படத்தில் பார்த்தால் காட்சி!

அரசியல் சொன்னால் கொள்கை!

அலுவலில் சொன்னால் சாணக்யம்!

வீட்டில் சொன்னால் இல்லறம்!

பத்திரிக்கைக்கு சொன்னால் பேட்டி!

படாடோபத்துக்கு அணிந்தால் உடைகள்!

எல்லையில் குவித்தால் படைகள்!

முகத்தில் பூசினால் பூச்சு!

மேடையில் சொன்னால் பேச்சு!

பொய்முகம் தெரியும்!

ஆனால், இங்கே

பொய்யின் முகங்கள்

ஆயிரம் ஆயிரம்!

Wednesday, July 21, 2010

இனிய சகாப்தம் இது

இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!உன் கண்கள்

அனுப்பிய கடிதங்கள்

என்னை நோக்கி

முகவரி தவறி வந்ததோ  - என்

முகத்தை நோக்கித்தான் வந்ததோ!

தெரியாத போதிலும் - அந்தக்

கடிதங்களின் மீதே - என்

விடியலின் நம்பிக்கைகள்!காதல் என்ற

கண்ணாமூச்சி விளையாட்டில்

உன் வார்த்தைகளுக்குள்

ஒளிந்திருந்த

அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்!ஆனால்

ஒளித்து வைத்தது

நீயா விதியா

என்றுதான் தெரியவில்லை!

ஆனாலும்..

உனக்குள்  ஒளிந்திருக்கும்

என்னை நீ

எப்போது கண்டுபிடிப்பாய்

என்ற

ஏக்கத்தில் நான்!


நீ

காட்டிய கரிசனங்கள்

காதலே! நட்பே! என்று

எனக்குள் நான்

எத்தனையோ

பட்டி மண்டபங்கள்

நடத்திப் பார்த்தாலும்

என் மனம் விரும்புவது

உன் மன மன்றத்தைத் தானே!


நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை - உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!


இது இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

கூரை
நீ மொட்டு விட்டு
மலரான நேரம் - வீட்டுல
தீ மூட்ட வழியில்ல ! ஆனா
இன்னும் ஒரு பாரம்!


முப்பது வயசு கிட்ட
மூத்தவ காத்திருக்கா!
இருவது வயசு தாண்டி
இளையவ இங்கிருக்கா!
பதினாலு வயசிலயே
பருவம் வந்து சேந்துட்டியே!
எரியுற என் வயித்தில்
எண்ணைய ஊத்திட்டயே!

பலகாரம் செஞ்சிடவே
காசில்லாத நேரத்துல - ஒனக்கு
அலங்காரம் செஞ்சு வக்க
ஆத்தா நான் எங்க போவேன்?
கூரையில மழைத்தண்ணி
தெனம் ஒழுகப் பாத்த வீட்டில்
ஒனக்குன்னு ஒரு கூரை
ஒதுக்க நானும் எங்க போவேன்?

முன்ன ரெண்ட தேத்திடவே
முடியாம போன வீட்டில்
பின்னவளும் சேந்திருக்கா
அப்படின்னா அழைப்பு வைப்பேன்!
அடுத்த வேள சமச்சிடவே
அடுப்பெரியா வீட்டுக்குள்ள
அடுத்தவளும் சமஞ்சுபுட்டா
அப்படின்னா அழைப்பு வப்பேன்?

ஒங்க அப்பன் குடிச்ச தண்ணி
ஒலகத்துக்கே கடன் வைக்க
ஒனக்கு இப்ப மஞ்சத்தண்ணி
ஊத்த நானும் எங்க போவேன்?
பந்தலுக்கு காத்திருக்கா
பாவிமக ரெண்டு பேரும்
கூர வச்சுக் கொண்டாட
கூடலயே எம்மனசும்!

பருவம் வந்த சேதிய
இப்பதிக்கு மறச்சிருவோம்!
 விடியும் தேதி வந்து சேரும் - அப்ப
விஷயத்த வெளிய சொல்வோம்!

Monday, July 19, 2010

கலியாணம் முடிச்சாச்சி!
கைகளிலும் தூக்காமல்

கழற்றியும் எறியாமல்

கால்களை பக்கம் சாய்த்து

கால்விரல் தரை தேய்த்து

எத்தி எத்தி

தத்தி தத்தி

பிய்ந்த செருப்போடு

சப்பாணி நடைபோட்டான்

எங்கள் ஊர் மாடசாமி!


எதிர்வந்த பெருமாள்

சட்டென கேட்டான்

" தச்சித்தான் போட்டாலென்ன

தலையா போகும்?!"

"எனக்கு கண்ணாலம் ஆகி

ஏழெட்டு வருஷமாச்சி!"

அசட்டுச் சிரிப்போடு

மாடசாமி சொல்ல

நமட்டுச் சிரிப்போடு

புரிந்ததாய்

புன்னகைத்தான்

பேச்சுதந்த பெருமாள்!

கல்யாணம் ஆகாத

எனக்கு மட்டும் தான்

எதுவும் புரியவில்லை!

Saturday, July 17, 2010

கவிதையும் காதலும்ஒரு விதை

கவிதையாவதைப்

போலத்தான்

ஒரு பார்வை

காதலாகிறது!எழுத்து

ஒவ்வொன்றும்

எங்கிருந்தோ வந்து

காகிதத்தில்

விழுவது போல்

எங்கிருந்தோ

புறப்பட்டு

இதயம் நகர்கிறது

காதல் உணர்வு!ஒவ்வொரு வாக்கியமும்

படிக்கப் படிக்க

கவிதா உலகுக்கு

இடம் பெயரும் ரசிகன்போல்

காதலின்

ஒவ்வொரு

படிக்கட்டிலும்

இடறி இடறி

சொர்க்கம் நோக்கி

புலம் பெயருகின்றனர்

காதலர்கள்!
கவிதையில்

புதுமையும் மரபும்

கலந்தே குழைவதைப்போல்

காதலும் கூட

முரணின் உருவம்தான்!கவிதை

ரசிக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை

வியக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை வெட்கப்படும்!

காதலும் தான்!

கவிதை துக்கப்படும்!

காதலும்தான்!ஆனாலும்

கவிதையும் காதலும்

வேறு வேறுதான்!


கவிதை படித்தால்

முடிந்துவிடும்!

 காதலித்தால்

காதல் முடியுமா.........?

Friday, July 16, 2010

அடையாளம்


விரல் நுனி ரேகைகள்

நுழைபவன் அடையாளம்!

இதழ் நுனி இளிப்புகள்

குழைபவன் அடையாளம்!உருகும் பனிப்போர்வை

உதித்ததின் அடையாளம்!

புரிதலும் புன்னகையும்

மனிதத்தின் அடையாளம்!அருகாமை நாடல்கள்

அன்பின் அடையாளம்!

நெருடாத ஊடல்கள்

நேசத்தின் அடையாளம்!புரிகின்ற பொருளெல்லாம்

படைப்பின் அடையாளம்!

புரியாத புதிர்களெல்லாம்

படைத்தவன் அடையாளம்!

நானும் நடிகனே
விழிகளின் வளைவினில்

விழுந்து புறப்பட்ட துளிகள்

விதையாகிப் பின்

விருட்சமாக....

மேகங்களுக்கிடையில்

சிக்குண்ட வானவில்

சின்னதாய்க் காட்டும்

சாயம்போன சாயல்

எனக்குள்ளும் ஊற...

கைக்குட்டை உதவியில்

கலக்கங்கள் துடைத்து

புன்னகை வில்லை

நாண் போட்டு வளைக்கும்

நானும் நடிகனே!

Wednesday, July 14, 2010

பயணம்
உதிரும் இலைகளைப் பார்த்து

மரம் கேட்டது

'என்னை விட்டு

எங்கே போகிறீர்கள் என"இலைகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க்கொண்டிருக்கிறாய்!"பெய்யும் மழைத்துளி பார்த்து

மேகம் கேட்டது

"என்னை விட்டு

எங்கே பொகிறீர்கள் என!"மழைத்துளிகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க் கொண்டிருக்கிறாய்!"
ஓடும் நொடிகளைப் பார்த்து

மனிதன் கேட்டான்

'என்னை விட்டு

எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்" என!

Friday, July 9, 2010

காணாமல் போன கனவுகள்காணாமல் போன

என் கனவுகளை

யாரேனும்

கண்டெடுத்தால்

அதை

கண்ட இடத்திலேயே

போட்டு விடுங்கள்!

அவை

திருவிழாவில்

தொலைந்த குழநதைபோல்

பெற்ற என்னிடம்

வரத்  துடிக்கும்!

ஆனாலும்

நீங்கள்

அவற்றை

என்னிடம்

சேர்க்காதீர்கள்!

நான்

நிஜமாக்க

முடியாத

கனவுகள் எல்லாம்

மனைவியாக்காத

காதலிகள் போல!

உங்களிடம்

குழந்தை போல்

அழும் கனவுகள்

என்னிடம்

மறந்த காதலியாய்

கேள்வி கேட்கும்!

அதனால்...

கனவுகள்

தொலைந்தே போகட்டும்!

கனவுகளை

கண்ட

இடத்திலேயே

விட்டு விடுங்கள்!

Wednesday, July 7, 2010

முடிவுஎவ்வளவோ

சோதனை வந்தும்

இறுதியில்

நல்லவனே ஜெயித்தான்!

பணபலம் இருந்தாலும் கூட

லஞ்சம் வாங்கிய

மந்திரி சிறை சென்றார்!

காதலர் இருவரும்

இனிதே இணைந்தனர்!

கெட்டவன் அழிந்ததால்

ஊருக்கே மகிழ்ச்சி!

எதிர்பார்த்த

முடிவுதான்!

ஆனாலும்

ஏகோபித்த

வரவேற்பு!

"சுபம்" என்ற

வார்த்தை பார்த்து

திரையை விட்டு

கண்ணெடுத்தான்

சாமானியன்!

வெளியே

நிஜ உலகம்

எதிர்பாரா முடிவுகளுடன்

அவனுக்காக

காத்திருந்தது!

நடுமுள்அந்தப் பக்கம்

சுழல்கிற கோள்களூம்

நகர்கிற சதுரங்களுமாய்

மாற்றி வைத்தன

வாழ்க்கையை!

இந்தப் பக்கம்

ஒன்பது சுற்றுகளும்

பரிகாரங்களுமாய்

ஏற்றி வைத்தன

வாழ்க்கையை!

ஏற்ற இறக்கங்கள்

பாவங்களிலும்

பரிகாரங்களிலும்

எப்படியோ

நடுமுள் தொட

பாவம்...

ஏறி

இறங்கிய

மனிதன் தான்

கட்டங்களுக்கும்

சட்டங்களுக்கும்

நடுவில்....

ஆடிக் கொண்டே...

வாழ்க்கையின்

நடுமுள் மட்டும்

நழுவிக் கொண்டே...

Monday, July 5, 2010

யார் வந்தது கனவில்?மீனுக்குட்டி  கனவில்

டோராதான் வந்தாளாம்!

பிரபு வாலு கனவில்

ஜாக்கிசானும் ஷேடோகானும்

அண்ணனின் கனவில்

அசினோ நயனோ!

பாட்டிக்கு

பல்செட் காணாமல்

போனதாகவும்

பின்னால் கிடைத்ததாகவும்

கனவு!

தாத்தாவுக்கு

பகலில் பீடியும்

இரவில் இருமலுமே

வாழ்வாகிப் போனதால்

கனவெல்லாம் கிடையாது!

அம்மாவுக்கு

அட்சய திதியில்

வாங்கிய நகை

குட்டி போடும் கனவு !

அப்பாவிடம்

கனவு பற்றி

கதைப்பதெல்லாம்

கனவுதான்...

அதுசரி

இத்தனை பேரின்

கனவையும்

எதற்காக

உன்னிடம் சொல்கிறேன்

என்றா கேட்கிறாய்?

இவ்வளவும் கேட்டுவிட்டு

என் கனவில்

யார் வந்தார்?

என்று நீ

கேட்காமலா போவாய்!

சொல்லப் போனால்சொன்னதையே

சொல்லிக் கொண்டிருந்த

குழந்தையும்...

சொல்லாததை

கடைசி வரை

சொல்லாத

பெரிசுகளும்

சொல்லக் கூடாததை

சொல்லி...

சொல்ல வேண்டியதை மறந்த

இளசுகளும்....

இப்படி

சொன்னதும்

சொல்லாததுமாய்

சொல்லாமலே

ஓடிய நொடிகளில்

கரைந்தது

சொல்லிக் கொள்ளும்படியான

விசேஷம்

ஏதுமற்ற வாழ்க்கை!

பார்வைகண்ணைக் கசக்கி

கைக்குட்டையை

ஈரப்படுத்தி

கண்ணிலிருந்த

அத்தனை தூசியும்

அகற்றி

கண்களை இடுக்கி

உற்று நோக்கியபின்

தெளிவாய்த் தெரிந்தது....

எனக்கு

ஒன்றுமே

தெரியவில்லையென்று!

Thursday, July 1, 2010

பொய்யாவது சொல்

பொய்யாவது சொல்

என்னைக் காதலிக்கிறாய் என்று!

சொல்லியாகிவிட்டதா?

சரி!

என்னது

சொன்னது பொய்யா?

அதெல்லாம்

கிடையாது!

ஆட்டத்தின் விதி

மாறிவிட்டது!

சொன்னது சொன்னதுதான்!

வா, காதலிக்கலாம்!

வானப் பலகை

நல்ல வேளை

அருகில் இல்லை

வானம்!

தொடுவானம் கூட

தொட முடிவதில்லை!

இல்லையென்றால்

வானப்பலகையிலும்

விளம்பரம்

எழுதியிருக்கும்

இந்த

விற்பனைக் கூட்டம்!

கிணற்றுத் தவளை

தத்துவம்

வாழ்வியல் என்று

தாவித் தாவி பார்த்தாலும்

உன் ஒரே

பார்வை

மழைத் துளியில்

மீண்டும்

காதல் கிணற்றிலேயே

விழுந்து விடுகிறது

என்

கவிதைத் தவளை!

Tuesday, June 29, 2010

சும்மா கிடந்த சங்கு

"சும்மா கிடந்த

சங்கை

ஊதிக் கெடுப்பானேன்!"

நண்பன் கேட்டதும்

ஊத வந்தவன்

ஊதாமல் விலகினான்!

கேட்டவனைப் பார்த்து

சங்கு கேட்டது...

" ஊத வேண்டிய

சங்கை

சும்மா கெடுப்பதேன்?

மீட்டாத வீணையென்றால்

வாடும் கூட்டமே!

ஊதாத சங்கு மட்டும்

உமக்கு ஊறுகாயோ?"

Saturday, June 26, 2010

உண்மை சுடுமா?

உண்மை சுடுமாம்!

எல்லாரும் சொன்னார்கள்!

ஆனால்

ஒருமுறை கூட

உண்மை சுட்டு

நான் பார்த்ததேயில்லை!

காந்தி முதல்

பிரசுரிக்கும்

காகிதம் வரை

உண்மை...

சுடப்பட்டல்லவா

செத்துக் கொண்டிருக்கிறது!

Monday, June 14, 2010

தொலைந்த சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்கும்!

"தொலைந்த சந்தோஷங்கள்

திரும்பக் கிடைக்கும்!"

விளமபரம் பார்த்து

விரைந்து ஓடினேன்!

சொன்ன இடத்தில்

கடை விரித்திருந்தார்!

அகன்ற அறையில்

ஆயிரம் விளக்குகள்!

அதனடியில் கிடந்தன

தொலைந்த சந்தோஷங்கள்!

பிரபல இதழில்

விளம்பரம் தந்ததால்

கூட்டத்துக்கோ குறைவில்லை!

தெரிந்த தலைகளில் - எனக்குத்

தெரிந்த தலைகளும் அடக்கம்!

என் நண்பரும் உறவுகளும் கூட

தேடிக் கொண்டிருந்தனர்!

என் சந்தோஷத்தை

தேட வந்திருப்பாரோ?

ஒரு கணம் யோசித்து

ஓரக் கண்ணால் பார்த்தேன்!

தத்தம் சந்தோஷத்தை

தேடிக் கொண்டிருந்தனர்!

நானும் இறங்கித்

தேடத் தொடங்க்கினேன்!

என் சந்தோஷம் தவிர

என்னென்னவோ கிடைத்தது!

மற்றவர் சந்தோஷம்

தம் கையில் கிடைத்தால்

அதை மீண்டும் வீசிவிட்டு

தேடல் தொடர்ந்தனர்!

சந்தோஷம் கிடைத்தாலும்

கிடைக்காவிட்டாலும்

தேடுதல் நேரத்தைப் பொறுத்தே

அவரவர் கட்டணம்!

மாலை வரை தேடி

மன்றம் களைத்தது!

மணி அடித்தவுடன்

கூட்டம் கலைந்தது!

ஒருவருக்கு கூட -

தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!

கிடைத்ததெல்லாம்

எல்லாருமே என்போல்

சந்தோஷம் தொலைத்த

சாமானியர் தான் என்ற

சந்தோஷம் மட்டுமே!

Thursday, June 10, 2010

என்ன செய்யப் போகிறேன்!

ஒரு பூ கேட்டாய்!
பூங்கொத்தே கொடுத்தேன்!
ஒரு புடவை கேட்டாய்!
உன் வார்ட்ரோபை நிறைத்தேன்!

எப்போதாவது
நேரம் கிடைத்தால்
செல்ஃபோனில் அழையென்றாய்!
ஆயிரங்களில் பில் கட்டினேன்!
எனக்குப் புரியாத
ஜோக் சொல்லி
புன்னகை செய் எனறாய் - நான்
புரண்டு விழுந்து சிரித்தேன்!

அலுவலகத்தில்
நீ இல்லாத போது
உன் இருக்கையையும்
கொஞ்சம் பார்த்துக் கொள் என்றாய்!
நீ இல்லாத போதும்
நீ இருக்கும் போதும்
என் இருக்கை கூட பாராமல்
உன் இருக்கை மட்டுமே பார்த்தேன்!

கண்ணதாசன் கவிதை
ஒன்றேயொன்று சொல் என்றாய்!
சினிமா பாட்டிலிருந்து
அர்த்தமுள்ள இந்துமதம் வரை
அவரின் உயில் தவிர
அவர் எழுதிய
அனைத்தும் பரிசளித்தேன்!

இப்படி
நீ எதைக் கேட்டாலும்
அதிகமாகத் தந்தே
பழகி விட்டேன்!
இன்று
ஒரே ஒரு
முத்தம் கேட்டிருக்கிறாய்...
என்ன செய்யப் போகிறேன்?!

Wednesday, June 9, 2010

வட்டம்

இதுதான் விதியென்று
யார் சொன்னாலும்
கேளேன்!
எல்லாரும்
செய்வது போல்
ஒருபோதும்
செய்யேன்!

இது இது
இப்படித்தான்
என்பதெல்லாம்
புரிந்ததேயில்லை எனக்கு!
விமர்சனங்கள் எல்லாம்
பாதித்ததேயில்லை என்னை!

அன்னை தந்தை
தம்பி தமக்கை
உறவு பாசம் கூட
உறுத்துவதில்லை
உள்ளத்தை!
காதல் பார்வையிலோ
மனைவியின் அரவணைப்பிலோ
எந்த மாற்றமும்
ஏற்ப்பட்டதில்லை என்னுள்!

தோழமை எல்லாம் கூட
தூரத்தில் தான்!
மழலையின் சிரிப்புகூட
ஒரத்தில் தான்!

என் வட்டத்திற்குள்
விட்டதில்லை யாரையும்!
ஆனால்..
வாழ்வின் ஒரு நாள்கூட
வாழ்ந்ததில்லை நானும்!

Friday, June 4, 2010

புரிதல்

ஊசிதான் வாழ்க்கை

அதன்

சூட்சுமத் துளைக்குள்

நுழைந்து புறப்படும்

நூலாவாய் நீ!

என்றார் துறவி!

சரியா சொன்னீங்க சாமி!

விக்கிற ஊசி

பொறுத்துத் தானே

நம்ம வாழ்க்கை!

என்றான் குறவன்!

Wednesday, June 2, 2010

பெயர் வைத்தல்

இருக்கிற பெயர்  பத்தாதென்று

நிலவுக்கு புதிதாய் பெயர் வைக்க

புறப்பட்டதோர் கும்பல்!

நட்ட நடு நிசியில்

பௌர்ணமி நிலவொளியில்

முதல் கூட்டம்!

பெயர் மட்டும் போதாது

சிலையும் வேண்டும்

என்றதொரு பிரிவு!

அது இது என

ஆலோசித்து முடிவை

அடுத்த கூட்டத்துக்கு

ஒத்தி வைத்தனர்!

அடுத்த கூட்ட நாளோ

அமாவாசையாய்ப் போனது!

நிலவைத் தேடி

ஏமாந்து கலைந்தனர்!

பெயர் வைக்கப் படாமலே

வளர்ந்தது புது நிலா!

Friday, May 14, 2010

மனசு

சர்கஸில் கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

அசரவேயில்லை!

அவனுக்குப் பிடித்த

கிளி விளையாட்டு காட்டும் பெண்

அவனைப் பார்த்திருக்கும்வரை!

 

அந்த கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

சிரிக்கவேயில்லை குழந்தை!

அதற்குப் பிடித்த

ஐஸ்கிரீமை

வாங்கித் தரும்வரை!