பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Monday, June 14, 2010

தொலைந்த சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்கும்!

"தொலைந்த சந்தோஷங்கள்

திரும்பக் கிடைக்கும்!"

விளமபரம் பார்த்து

விரைந்து ஓடினேன்!

சொன்ன இடத்தில்

கடை விரித்திருந்தார்!

அகன்ற அறையில்

ஆயிரம் விளக்குகள்!

அதனடியில் கிடந்தன

தொலைந்த சந்தோஷங்கள்!

பிரபல இதழில்

விளம்பரம் தந்ததால்

கூட்டத்துக்கோ குறைவில்லை!

தெரிந்த தலைகளில் - எனக்குத்

தெரிந்த தலைகளும் அடக்கம்!

என் நண்பரும் உறவுகளும் கூட

தேடிக் கொண்டிருந்தனர்!

என் சந்தோஷத்தை

தேட வந்திருப்பாரோ?

ஒரு கணம் யோசித்து

ஓரக் கண்ணால் பார்த்தேன்!

தத்தம் சந்தோஷத்தை

தேடிக் கொண்டிருந்தனர்!

நானும் இறங்கித்

தேடத் தொடங்க்கினேன்!

என் சந்தோஷம் தவிர

என்னென்னவோ கிடைத்தது!

மற்றவர் சந்தோஷம்

தம் கையில் கிடைத்தால்

அதை மீண்டும் வீசிவிட்டு

தேடல் தொடர்ந்தனர்!

சந்தோஷம் கிடைத்தாலும்

கிடைக்காவிட்டாலும்

தேடுதல் நேரத்தைப் பொறுத்தே

அவரவர் கட்டணம்!

மாலை வரை தேடி

மன்றம் களைத்தது!

மணி அடித்தவுடன்

கூட்டம் கலைந்தது!

ஒருவருக்கு கூட -

தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!

கிடைத்ததெல்லாம்

எல்லாருமே என்போல்

சந்தோஷம் தொலைத்த

சாமானியர் தான் என்ற

சந்தோஷம் மட்டுமே!

1 comments:

shahidha said...

மறுமொழி தரவெல்லாம் மதியில்லை எனக்கு...
மகிழ்ச்சி தான் உன் கவிதை படித்து...

Post a Comment