பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Tuesday, September 21, 2010

தத்துப்பித்து தத்துவம்

என் கனவுகள் எல்லாம்

 கலைந்து போயின!

உணர்வுகள் கூட

உலர்ந்து போயின!

தொட்டால் சுருங்கும் செடியினைப் போல

பட்டு சுருங்கியது எனது உள்ளம்!


விதியா வினையா

இயற்கை விளையாட்டா

எதுவென்றே புரியாமல்

ஏறி இறங்கியது வாழ்க்கை!

அதெல்லாம் சரி!

பள்ளி முடித்த குழந்தை

படிக்கட்டு ஏறுகையில்

இந்தத் தத்துவமெல்லாம்

அவள் தத்துப்பித்துமுன்

தானே வெளியேற

குழந்தையோடு குழந்தையாய் நான்!

Friday, August 6, 2010

சுட்டும் விழிச்சுடர் கட்டும் கருவிழி

சுட்டும் விழிச்சுடர்! கட்டும் கருவிழிகள்!
பொட்டும் பூவும் பரிமளிக்க
பட்டும் மேனியாய் அவள் தரிக்க- மின்
வெட்டும் நின்றது போல் அவள் சிரிக்கஇது
கொட்டும் அருவியோ சிட்டுக் குருவியோ என திகைக்க
தட்டும் உணவும்போல் இணைய மனக்கதவை
தட்டும் அவள் கைகள் கனவில்! காதல்
மெட்டும் கூட காதில் கேட்கிறது! இன்பம்
கிட்டும் கிட்டுமென்ற அசரீரி கேட்கிறது!
தொட்டும் தொடாமலும் என்னருகில் அவள்
மட்டும் இருந்திருந்தால் கனவுகள் நினைவேதான்! ஆனால்
சிட்டும் அவளோடு அஞ்ச வைக்கும் அண்ணன்
வெட்டும் வீச்சரிவாள் இல்லாமலே பயமுறுத்த
பட்டும் படாததுபோல் பாசாங்கு நான் செய்தேன்

Wednesday, August 4, 2010

தந்தை பாசம்தண்டச்சோறு
ஊர்சுத்தி என்று
சதா சர்வகாலமும்
திட்டினாலும்
நான் எடுப்பேன்
எனத் தெரிந்தே
ஓரம் கிழிந்த அவர்
சட்டையின் பையில்
என் அப்பா வைக்கும்
அந்த நூறு ரூபாய்த்
தாளின் 
வியர்வைக் கரையில்
தெறிக்கிறது
எனக்கும்
என்
தந்தைக்குமான பாசம்!

கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க :

Wednesday, July 28, 2010

ஒரு பூங்காவின் வரவு செலவுஒரு பட்டாம்பூச்சிதான்
அன்று
அந்தப் பூங்காவின்
முதல் வரவு!
மெல்ல மெல்ல 
 சிறகடித்து
தன் பட்டு இறக்கை
குவித்து விரித்து
முதல் பூவான
 ஊதாப் பூ மேல்
உட்கார்ந்தது!
அதன் நீலப் பொட்டு
சிறகிற்கும்
ஊதாப் பூவின்
நிறத்திற்கும்
ஒத்துப் போயிருக்கலாம்!


ஊதாப் பூவை
முகர்ந்தபடியே
சுற்றிலும் பார்த்தது
பட்டாம்பூச்சி!
தூரத்தில் இருந்து
பட்டாம்பூச்சியைப்
பார்த்தது
வெளிர் நிற ரோஜா!
வண்ண வண்ணமான
மலர்களுக்கிடையே
வண்ணமேயில்லாத
அந்த ரோஜாவை
ஆச்சர்யமாய் பார்த்தது
பட்டாம்பூச்சி!

மலர் விட்டு
மலர் தாவுதல்
குற்றமென்ற சட்டம்
அந்தப் பூங்காவில்
அமலில் இல்லை!
ஊதாப் பூ விட்டு
வெள்ளை ரோஜாவுக்கு
உடனே கூட
தாவியிருக்கலாம்........
ஆனாலும் அது
ஊதாப் பூவிலேயே
உட்கார்ந்திருந்தது!

அவ்வப்போது
வெள்ளை ரோஜாவும்
நிலச்சிறகு பட்டாம்பூச்சியும்
பார்வைப் பரிமாற்றம்
பலநூறு செய்தன!


ஒரு ரீங்காரம் ஒன்று
காற்றைக் கிழிக்க
கரிய வண்டொன்று
மௌனம் கலைத்தது!

கடைசியாய்...
பட்டாம் பூச்சி
அந்தப் பக்கம்
பார்க்கையில் - அது
வெள்ளை ரோஜா பக்கம்
போனதாய்த்தான்
அதற்கு ஞாபகம்!

அன்று
தோட்டத்தை விட்டு
 கடைசியாய்
காற்றில் போனது
நான்கைந்து
ரோஜா இதழ் சருகுகளும்
ஒரு நீலச் சிறகும் தான்!


கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க : 

Monday, July 26, 2010

ஆயிரம் முகங்கள்!காதலில் சொன்னால் வர்ணனை!

கவிதையில் சொன்னால் உவமை!

கதையில் சொன்னால் கற்பனை!

விளம்பரம் சொன்னால் விற்பனை!

கோர்ட்டில் சொன்னால் சாட்சி!

படத்தில் பார்த்தால் காட்சி!

அரசியல் சொன்னால் கொள்கை!

அலுவலில் சொன்னால் சாணக்யம்!

வீட்டில் சொன்னால் இல்லறம்!

பத்திரிக்கைக்கு சொன்னால் பேட்டி!

படாடோபத்துக்கு அணிந்தால் உடைகள்!

எல்லையில் குவித்தால் படைகள்!

முகத்தில் பூசினால் பூச்சு!

மேடையில் சொன்னால் பேச்சு!

பொய்முகம் தெரியும்!

ஆனால், இங்கே

பொய்யின் முகங்கள்

ஆயிரம் ஆயிரம்!

Wednesday, July 21, 2010

இனிய சகாப்தம் இது

இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!உன் கண்கள்

அனுப்பிய கடிதங்கள்

என்னை நோக்கி

முகவரி தவறி வந்ததோ  - என்

முகத்தை நோக்கித்தான் வந்ததோ!

தெரியாத போதிலும் - அந்தக்

கடிதங்களின் மீதே - என்

விடியலின் நம்பிக்கைகள்!காதல் என்ற

கண்ணாமூச்சி விளையாட்டில்

உன் வார்த்தைகளுக்குள்

ஒளிந்திருந்த

அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்!ஆனால்

ஒளித்து வைத்தது

நீயா விதியா

என்றுதான் தெரியவில்லை!

ஆனாலும்..

உனக்குள்  ஒளிந்திருக்கும்

என்னை நீ

எப்போது கண்டுபிடிப்பாய்

என்ற

ஏக்கத்தில் நான்!


நீ

காட்டிய கரிசனங்கள்

காதலே! நட்பே! என்று

எனக்குள் நான்

எத்தனையோ

பட்டி மண்டபங்கள்

நடத்திப் பார்த்தாலும்

என் மனம் விரும்புவது

உன் மன மன்றத்தைத் தானே!


நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை - உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!


இது இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

கூரை
நீ மொட்டு விட்டு
மலரான நேரம் - வீட்டுல
தீ மூட்ட வழியில்ல ! ஆனா
இன்னும் ஒரு பாரம்!


முப்பது வயசு கிட்ட
மூத்தவ காத்திருக்கா!
இருவது வயசு தாண்டி
இளையவ இங்கிருக்கா!
பதினாலு வயசிலயே
பருவம் வந்து சேந்துட்டியே!
எரியுற என் வயித்தில்
எண்ணைய ஊத்திட்டயே!

பலகாரம் செஞ்சிடவே
காசில்லாத நேரத்துல - ஒனக்கு
அலங்காரம் செஞ்சு வக்க
ஆத்தா நான் எங்க போவேன்?
கூரையில மழைத்தண்ணி
தெனம் ஒழுகப் பாத்த வீட்டில்
ஒனக்குன்னு ஒரு கூரை
ஒதுக்க நானும் எங்க போவேன்?

முன்ன ரெண்ட தேத்திடவே
முடியாம போன வீட்டில்
பின்னவளும் சேந்திருக்கா
அப்படின்னா அழைப்பு வைப்பேன்!
அடுத்த வேள சமச்சிடவே
அடுப்பெரியா வீட்டுக்குள்ள
அடுத்தவளும் சமஞ்சுபுட்டா
அப்படின்னா அழைப்பு வப்பேன்?

ஒங்க அப்பன் குடிச்ச தண்ணி
ஒலகத்துக்கே கடன் வைக்க
ஒனக்கு இப்ப மஞ்சத்தண்ணி
ஊத்த நானும் எங்க போவேன்?
பந்தலுக்கு காத்திருக்கா
பாவிமக ரெண்டு பேரும்
கூர வச்சுக் கொண்டாட
கூடலயே எம்மனசும்!

பருவம் வந்த சேதிய
இப்பதிக்கு மறச்சிருவோம்!
 விடியும் தேதி வந்து சேரும் - அப்ப
விஷயத்த வெளிய சொல்வோம்!