பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Tuesday, June 29, 2010

சும்மா கிடந்த சங்கு

"சும்மா கிடந்த

சங்கை

ஊதிக் கெடுப்பானேன்!"

நண்பன் கேட்டதும்

ஊத வந்தவன்

ஊதாமல் விலகினான்!

கேட்டவனைப் பார்த்து

சங்கு கேட்டது...

" ஊத வேண்டிய

சங்கை

சும்மா கெடுப்பதேன்?

மீட்டாத வீணையென்றால்

வாடும் கூட்டமே!

ஊதாத சங்கு மட்டும்

உமக்கு ஊறுகாயோ?"

Saturday, June 26, 2010

உண்மை சுடுமா?

உண்மை சுடுமாம்!

எல்லாரும் சொன்னார்கள்!

ஆனால்

ஒருமுறை கூட

உண்மை சுட்டு

நான் பார்த்ததேயில்லை!

காந்தி முதல்

பிரசுரிக்கும்

காகிதம் வரை

உண்மை...

சுடப்பட்டல்லவா

செத்துக் கொண்டிருக்கிறது!

Monday, June 14, 2010

தொலைந்த சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்கும்!

"தொலைந்த சந்தோஷங்கள்

திரும்பக் கிடைக்கும்!"

விளமபரம் பார்த்து

விரைந்து ஓடினேன்!

சொன்ன இடத்தில்

கடை விரித்திருந்தார்!

அகன்ற அறையில்

ஆயிரம் விளக்குகள்!

அதனடியில் கிடந்தன

தொலைந்த சந்தோஷங்கள்!

பிரபல இதழில்

விளம்பரம் தந்ததால்

கூட்டத்துக்கோ குறைவில்லை!

தெரிந்த தலைகளில் - எனக்குத்

தெரிந்த தலைகளும் அடக்கம்!

என் நண்பரும் உறவுகளும் கூட

தேடிக் கொண்டிருந்தனர்!

என் சந்தோஷத்தை

தேட வந்திருப்பாரோ?

ஒரு கணம் யோசித்து

ஓரக் கண்ணால் பார்த்தேன்!

தத்தம் சந்தோஷத்தை

தேடிக் கொண்டிருந்தனர்!

நானும் இறங்கித்

தேடத் தொடங்க்கினேன்!

என் சந்தோஷம் தவிர

என்னென்னவோ கிடைத்தது!

மற்றவர் சந்தோஷம்

தம் கையில் கிடைத்தால்

அதை மீண்டும் வீசிவிட்டு

தேடல் தொடர்ந்தனர்!

சந்தோஷம் கிடைத்தாலும்

கிடைக்காவிட்டாலும்

தேடுதல் நேரத்தைப் பொறுத்தே

அவரவர் கட்டணம்!

மாலை வரை தேடி

மன்றம் களைத்தது!

மணி அடித்தவுடன்

கூட்டம் கலைந்தது!

ஒருவருக்கு கூட -

தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!

கிடைத்ததெல்லாம்

எல்லாருமே என்போல்

சந்தோஷம் தொலைத்த

சாமானியர் தான் என்ற

சந்தோஷம் மட்டுமே!

Thursday, June 10, 2010

என்ன செய்யப் போகிறேன்!

ஒரு பூ கேட்டாய்!
பூங்கொத்தே கொடுத்தேன்!
ஒரு புடவை கேட்டாய்!
உன் வார்ட்ரோபை நிறைத்தேன்!

எப்போதாவது
நேரம் கிடைத்தால்
செல்ஃபோனில் அழையென்றாய்!
ஆயிரங்களில் பில் கட்டினேன்!
எனக்குப் புரியாத
ஜோக் சொல்லி
புன்னகை செய் எனறாய் - நான்
புரண்டு விழுந்து சிரித்தேன்!

அலுவலகத்தில்
நீ இல்லாத போது
உன் இருக்கையையும்
கொஞ்சம் பார்த்துக் கொள் என்றாய்!
நீ இல்லாத போதும்
நீ இருக்கும் போதும்
என் இருக்கை கூட பாராமல்
உன் இருக்கை மட்டுமே பார்த்தேன்!

கண்ணதாசன் கவிதை
ஒன்றேயொன்று சொல் என்றாய்!
சினிமா பாட்டிலிருந்து
அர்த்தமுள்ள இந்துமதம் வரை
அவரின் உயில் தவிர
அவர் எழுதிய
அனைத்தும் பரிசளித்தேன்!

இப்படி
நீ எதைக் கேட்டாலும்
அதிகமாகத் தந்தே
பழகி விட்டேன்!
இன்று
ஒரே ஒரு
முத்தம் கேட்டிருக்கிறாய்...
என்ன செய்யப் போகிறேன்?!

Wednesday, June 9, 2010

வட்டம்

இதுதான் விதியென்று
யார் சொன்னாலும்
கேளேன்!
எல்லாரும்
செய்வது போல்
ஒருபோதும்
செய்யேன்!

இது இது
இப்படித்தான்
என்பதெல்லாம்
புரிந்ததேயில்லை எனக்கு!
விமர்சனங்கள் எல்லாம்
பாதித்ததேயில்லை என்னை!

அன்னை தந்தை
தம்பி தமக்கை
உறவு பாசம் கூட
உறுத்துவதில்லை
உள்ளத்தை!
காதல் பார்வையிலோ
மனைவியின் அரவணைப்பிலோ
எந்த மாற்றமும்
ஏற்ப்பட்டதில்லை என்னுள்!

தோழமை எல்லாம் கூட
தூரத்தில் தான்!
மழலையின் சிரிப்புகூட
ஒரத்தில் தான்!

என் வட்டத்திற்குள்
விட்டதில்லை யாரையும்!
ஆனால்..
வாழ்வின் ஒரு நாள்கூட
வாழ்ந்ததில்லை நானும்!

Friday, June 4, 2010

புரிதல்

ஊசிதான் வாழ்க்கை

அதன்

சூட்சுமத் துளைக்குள்

நுழைந்து புறப்படும்

நூலாவாய் நீ!

என்றார் துறவி!

சரியா சொன்னீங்க சாமி!

விக்கிற ஊசி

பொறுத்துத் தானே

நம்ம வாழ்க்கை!

என்றான் குறவன்!

Wednesday, June 2, 2010

பெயர் வைத்தல்

இருக்கிற பெயர்  பத்தாதென்று

நிலவுக்கு புதிதாய் பெயர் வைக்க

புறப்பட்டதோர் கும்பல்!

நட்ட நடு நிசியில்

பௌர்ணமி நிலவொளியில்

முதல் கூட்டம்!

பெயர் மட்டும் போதாது

சிலையும் வேண்டும்

என்றதொரு பிரிவு!

அது இது என

ஆலோசித்து முடிவை

அடுத்த கூட்டத்துக்கு

ஒத்தி வைத்தனர்!

அடுத்த கூட்ட நாளோ

அமாவாசையாய்ப் போனது!

நிலவைத் தேடி

ஏமாந்து கலைந்தனர்!

பெயர் வைக்கப் படாமலே

வளர்ந்தது புது நிலா!