Wednesday, July 28, 2010
ஒரு பூங்காவின் வரவு செலவு
ஒரு பட்டாம்பூச்சிதான்
அன்று
அந்தப் பூங்காவின்
முதல் வரவு!
மெல்ல மெல்ல
சிறகடித்து
தன் பட்டு இறக்கை
குவித்து விரித்து
முதல் பூவான
ஊதாப் பூ மேல்
உட்கார்ந்தது!
அதன் நீலப் பொட்டு
சிறகிற்கும்
ஊதாப் பூவின்
நிறத்திற்கும்
ஒத்துப் போயிருக்கலாம்!
ஊதாப் பூவை
முகர்ந்தபடியே
சுற்றிலும் பார்த்தது
பட்டாம்பூச்சி!
தூரத்தில் இருந்து
பட்டாம்பூச்சியைப்
பார்த்தது
வெளிர் நிற ரோஜா!
வண்ண வண்ணமான
மலர்களுக்கிடையே
வண்ணமேயில்லாத
அந்த ரோஜாவை
ஆச்சர்யமாய் பார்த்தது
பட்டாம்பூச்சி!
மலர் விட்டு
மலர் தாவுதல்
குற்றமென்ற சட்டம்
அந்தப் பூங்காவில்
அமலில் இல்லை!
ஊதாப் பூ விட்டு
வெள்ளை ரோஜாவுக்கு
உடனே கூட
தாவியிருக்கலாம்........
ஆனாலும் அது
ஊதாப் பூவிலேயே
உட்கார்ந்திருந்தது!
அவ்வப்போது
வெள்ளை ரோஜாவும்
நிலச்சிறகு பட்டாம்பூச்சியும்
பார்வைப் பரிமாற்றம்
பலநூறு செய்தன!
ஒரு ரீங்காரம் ஒன்று
காற்றைக் கிழிக்க
கரிய வண்டொன்று
மௌனம் கலைத்தது!
கடைசியாய்...
பட்டாம் பூச்சி
அந்தப் பக்கம்
பார்க்கையில் - அது
வெள்ளை ரோஜா பக்கம்
போனதாய்த்தான்
அதற்கு ஞாபகம்!
அன்று
தோட்டத்தை விட்டு
கடைசியாய்
காற்றில் போனது
நான்கைந்து
ரோஜா இதழ் சருகுகளும்
ஒரு நீலச் சிறகும் தான்!
கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க :
Labels:
a tamil poem on life,
a tamil poem on love,
kavithai,
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
awesome......
Post a Comment