பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Wednesday, July 21, 2010

கூரை
நீ மொட்டு விட்டு
மலரான நேரம் - வீட்டுல
தீ மூட்ட வழியில்ல ! ஆனா
இன்னும் ஒரு பாரம்!


முப்பது வயசு கிட்ட
மூத்தவ காத்திருக்கா!
இருவது வயசு தாண்டி
இளையவ இங்கிருக்கா!
பதினாலு வயசிலயே
பருவம் வந்து சேந்துட்டியே!
எரியுற என் வயித்தில்
எண்ணைய ஊத்திட்டயே!

பலகாரம் செஞ்சிடவே
காசில்லாத நேரத்துல - ஒனக்கு
அலங்காரம் செஞ்சு வக்க
ஆத்தா நான் எங்க போவேன்?
கூரையில மழைத்தண்ணி
தெனம் ஒழுகப் பாத்த வீட்டில்
ஒனக்குன்னு ஒரு கூரை
ஒதுக்க நானும் எங்க போவேன்?

முன்ன ரெண்ட தேத்திடவே
முடியாம போன வீட்டில்
பின்னவளும் சேந்திருக்கா
அப்படின்னா அழைப்பு வைப்பேன்!
அடுத்த வேள சமச்சிடவே
அடுப்பெரியா வீட்டுக்குள்ள
அடுத்தவளும் சமஞ்சுபுட்டா
அப்படின்னா அழைப்பு வப்பேன்?

ஒங்க அப்பன் குடிச்ச தண்ணி
ஒலகத்துக்கே கடன் வைக்க
ஒனக்கு இப்ப மஞ்சத்தண்ணி
ஊத்த நானும் எங்க போவேன்?
பந்தலுக்கு காத்திருக்கா
பாவிமக ரெண்டு பேரும்
கூர வச்சுக் கொண்டாட
கூடலயே எம்மனசும்!

பருவம் வந்த சேதிய
இப்பதிக்கு மறச்சிருவோம்!
 விடியும் தேதி வந்து சேரும் - அப்ப
விஷயத்த வெளிய சொல்வோம்!

3 comments:

ஷஹி said...

reminds me of one of vairamuthu's poems...vry touching one....cngrats...

Jayaprakashvel said...

இது ரொம்ப நல்லா இருக்கு. எதார்த்தமான வரிகளில் நாட்டுப்புற பாடலின் தொணியில். நல்லா இருக்கு. சினிமா பாடல் போல ஒரு கதையையும் சொல்கிறது.

Abhi said...

நன்றி ஷஹி & ஜயப்ரகாஷ்வேல் . ஷஹி, இது வைரமுத்துவின் "ஏம்மா குத்த வச்ச " inspirationல் எழுதுனது!

Post a Comment