பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Showing posts with label a tamil poem on love. Show all posts
Showing posts with label a tamil poem on love. Show all posts

Friday, August 6, 2010

சுட்டும் விழிச்சுடர் கட்டும் கருவிழி





சுட்டும் விழிச்சுடர்! கட்டும் கருவிழிகள்!
பொட்டும் பூவும் பரிமளிக்க
பட்டும் மேனியாய் அவள் தரிக்க- மின்
வெட்டும் நின்றது போல் அவள் சிரிக்கஇது
கொட்டும் அருவியோ சிட்டுக் குருவியோ என திகைக்க
தட்டும் உணவும்போல் இணைய மனக்கதவை
தட்டும் அவள் கைகள் கனவில்! காதல்
மெட்டும் கூட காதில் கேட்கிறது! இன்பம்
கிட்டும் கிட்டுமென்ற அசரீரி கேட்கிறது!
தொட்டும் தொடாமலும் என்னருகில் அவள்
மட்டும் இருந்திருந்தால் கனவுகள் நினைவேதான்! ஆனால்
சிட்டும் அவளோடு அஞ்ச வைக்கும் அண்ணன்
வெட்டும் வீச்சரிவாள் இல்லாமலே பயமுறுத்த
பட்டும் படாததுபோல் பாசாங்கு நான் செய்தேன்

Wednesday, July 28, 2010

ஒரு பூங்காவின் வரவு செலவு



ஒரு பட்டாம்பூச்சிதான்
அன்று
அந்தப் பூங்காவின்
முதல் வரவு!
மெல்ல மெல்ல 
 சிறகடித்து
தன் பட்டு இறக்கை
குவித்து விரித்து
முதல் பூவான
 ஊதாப் பூ மேல்
உட்கார்ந்தது!
அதன் நீலப் பொட்டு
சிறகிற்கும்
ஊதாப் பூவின்
நிறத்திற்கும்
ஒத்துப் போயிருக்கலாம்!


ஊதாப் பூவை
முகர்ந்தபடியே
சுற்றிலும் பார்த்தது
பட்டாம்பூச்சி!
தூரத்தில் இருந்து
பட்டாம்பூச்சியைப்
பார்த்தது
வெளிர் நிற ரோஜா!
வண்ண வண்ணமான
மலர்களுக்கிடையே
வண்ணமேயில்லாத
அந்த ரோஜாவை
ஆச்சர்யமாய் பார்த்தது
பட்டாம்பூச்சி!

மலர் விட்டு
மலர் தாவுதல்
குற்றமென்ற சட்டம்
அந்தப் பூங்காவில்
அமலில் இல்லை!
ஊதாப் பூ விட்டு
வெள்ளை ரோஜாவுக்கு
உடனே கூட
தாவியிருக்கலாம்........
ஆனாலும் அது
ஊதாப் பூவிலேயே
உட்கார்ந்திருந்தது!

அவ்வப்போது
வெள்ளை ரோஜாவும்
நிலச்சிறகு பட்டாம்பூச்சியும்
பார்வைப் பரிமாற்றம்
பலநூறு செய்தன!


ஒரு ரீங்காரம் ஒன்று
காற்றைக் கிழிக்க
கரிய வண்டொன்று
மௌனம் கலைத்தது!

கடைசியாய்...
பட்டாம் பூச்சி
அந்தப் பக்கம்
பார்க்கையில் - அது
வெள்ளை ரோஜா பக்கம்
போனதாய்த்தான்
அதற்கு ஞாபகம்!

அன்று
தோட்டத்தை விட்டு
 கடைசியாய்
காற்றில் போனது
நான்கைந்து
ரோஜா இதழ் சருகுகளும்
ஒரு நீலச் சிறகும் தான்!


கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க : 

Wednesday, July 21, 2010

இனிய சகாப்தம்



 இது

இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!



உன் கண்கள்

அனுப்பிய கடிதங்கள்

என்னை நோக்கி

முகவரி தவறி வந்ததோ  - என்

முகத்தை நோக்கித்தான் வந்ததோ!

தெரியாத போதிலும் - அந்தக்

கடிதங்களின் மீதே - என்

விடியலின் நம்பிக்கைகள்!



காதல் என்ற

கண்ணாமூச்சி விளையாட்டில்

உன் வார்த்தைகளுக்குள்

ஒளிந்திருந்த

அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்!



ஆனால்

ஒளித்து வைத்தது

நீயா விதியா

என்றுதான் தெரியவில்லை!

ஆனாலும்..

உனக்குள்  ஒளிந்திருக்கும்

என்னை நீ

எப்போது கண்டுபிடிப்பாய்

என்ற

ஏக்கத்தில் நான்!


நீ

காட்டிய கரிசனங்கள்

காதலே! நட்பே! என்று

எனக்குள் நான்

எத்தனையோ

பட்டி மண்டபங்கள்

நடத்திப் பார்த்தாலும்

என் மனம் விரும்புவது

உன் மன மன்றத்தைத் தானே!


நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை - உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!


இது இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

Saturday, July 17, 2010

கவிதையும் காதலும்



ஒரு விதை

கவிதையாவதைப்

போலத்தான்

ஒரு பார்வை

காதலாகிறது!



எழுத்து

ஒவ்வொன்றும்

எங்கிருந்தோ வந்து

காகிதத்தில்

விழுவது போல்

எங்கிருந்தோ

புறப்பட்டு

இதயம் நகர்கிறது

காதல் உணர்வு!



ஒவ்வொரு வாக்கியமும்

படிக்கப் படிக்க

கவிதா உலகுக்கு

இடம் பெயரும் ரசிகன்போல்

காதலின்

ஒவ்வொரு

படிக்கட்டிலும்

இடறி இடறி

சொர்க்கம் நோக்கி

புலம் பெயருகின்றனர்

காதலர்கள்!




கவிதையில்

புதுமையும் மரபும்

கலந்தே குழைவதைப்போல்

காதலும் கூட

முரணின் உருவம்தான்!



கவிதை

ரசிக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை

வியக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை வெட்கப்படும்!

காதலும் தான்!

கவிதை துக்கப்படும்!

காதலும்தான்!



ஆனாலும்

கவிதையும் காதலும்

வேறு வேறுதான்!


கவிதை படித்தால்

முடிந்துவிடும்!

 காதலித்தால்

காதல் முடியுமா.........?

Wednesday, July 7, 2010

நடுமுள்



அந்தப் பக்கம்

சுழல்கிற கோள்களூம்

நகர்கிற சதுரங்களுமாய்

மாற்றி வைத்தன

வாழ்க்கையை!

இந்தப் பக்கம்

ஒன்பது சுற்றுகளும்

பரிகாரங்களுமாய்

ஏற்றி வைத்தன

வாழ்க்கையை!

ஏற்ற இறக்கங்கள்

பாவங்களிலும்

பரிகாரங்களிலும்

எப்படியோ

நடுமுள் தொட

பாவம்...

ஏறி

இறங்கிய

மனிதன் தான்

கட்டங்களுக்கும்

சட்டங்களுக்கும்

நடுவில்....

ஆடிக் கொண்டே...

வாழ்க்கையின்

நடுமுள் மட்டும்

நழுவிக் கொண்டே...

Monday, July 5, 2010

யார் வந்தது கனவில்?



மீனுக்குட்டி  கனவில்

டோராதான் வந்தாளாம்!

பிரபு வாலு கனவில்

ஜாக்கிசானும் ஷேடோகானும்

அண்ணனின் கனவில்

அசினோ நயனோ!

பாட்டிக்கு

பல்செட் காணாமல்

போனதாகவும்

பின்னால் கிடைத்ததாகவும்

கனவு!

தாத்தாவுக்கு

பகலில் பீடியும்

இரவில் இருமலுமே

வாழ்வாகிப் போனதால்

கனவெல்லாம் கிடையாது!

அம்மாவுக்கு

அட்சய திதியில்

வாங்கிய நகை

குட்டி போடும் கனவு !

அப்பாவிடம்

கனவு பற்றி

கதைப்பதெல்லாம்

கனவுதான்...

அதுசரி

இத்தனை பேரின்

கனவையும்

எதற்காக

உன்னிடம் சொல்கிறேன்

என்றா கேட்கிறாய்?

இவ்வளவும் கேட்டுவிட்டு

என் கனவில்

யார் வந்தார்?

என்று நீ

கேட்காமலா போவாய்!

Thursday, July 1, 2010

வானப் பலகை

நல்ல வேளை

அருகில் இல்லை

வானம்!

தொடுவானம் கூட

தொட முடிவதில்லை!

இல்லையென்றால்

வானப்பலகையிலும்

விளம்பரம்

எழுதியிருக்கும்

இந்த

விற்பனைக் கூட்டம்!

Thursday, June 10, 2010

என்ன செய்யப் போகிறேன்!

ஒரு பூ கேட்டாய்!
பூங்கொத்தே கொடுத்தேன்!
ஒரு புடவை கேட்டாய்!
உன் வார்ட்ரோபை நிறைத்தேன்!

எப்போதாவது
நேரம் கிடைத்தால்
செல்ஃபோனில் அழையென்றாய்!
ஆயிரங்களில் பில் கட்டினேன்!
எனக்குப் புரியாத
ஜோக் சொல்லி
புன்னகை செய் எனறாய் - நான்
புரண்டு விழுந்து சிரித்தேன்!

அலுவலகத்தில்
நீ இல்லாத போது
உன் இருக்கையையும்
கொஞ்சம் பார்த்துக் கொள் என்றாய்!
நீ இல்லாத போதும்
நீ இருக்கும் போதும்
என் இருக்கை கூட பாராமல்
உன் இருக்கை மட்டுமே பார்த்தேன்!

கண்ணதாசன் கவிதை
ஒன்றேயொன்று சொல் என்றாய்!
சினிமா பாட்டிலிருந்து
அர்த்தமுள்ள இந்துமதம் வரை
அவரின் உயில் தவிர
அவர் எழுதிய
அனைத்தும் பரிசளித்தேன்!

இப்படி
நீ எதைக் கேட்டாலும்
அதிகமாகத் தந்தே
பழகி விட்டேன்!
இன்று
ஒரே ஒரு
முத்தம் கேட்டிருக்கிறாய்...
என்ன செய்யப் போகிறேன்?!